நாட்டுச்சர்க்கரை தேங்காய் பர்ஃபி



        சிறுவயதில் நாம் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிட்ட தேங்காய் பர்ஃபி. அந்த தேங்காய் பர்ஃபியை வீட்டிலேயே எளிமையான ஆரோக்கியமான முறையில் எப்படி  செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம். எங்கள் வீட்டில் பொங்கல்  விழா முடிந்த பிறகு அனைத்து தேங்காய்களையும் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் செய்யக்கூடிய இனிப்பு.


     அதில் வெள்ளை சர்க்கரை சேர்த்து தான் என் அம்மா செய்து தருவார். நான் அதில் மாற்றம் வேண்டும் என்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் நாட்டுச்சர்க்கரை கொண்டு கடைசி ஆண்டு முயற்சி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது, அதை தங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.நாட்டுச்சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கூட சுவைக்கலாம்.

தேவையானப் பொருட்கள் : 

1. தேங்காய் துருவல் - 1 1/2 கிண்ணம்
2. நாட்டுச்சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
3. நெய் - 2 மேஜைக்கரண்டி
4. ஏலக்காய் - 3-4
5. தண்ணீர் - 3/4 கிண்ணம்



செய்முறை விளக்கம் :
  • நாட்டுச்சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கரைக்கவும். பிறகு கரைசலை வடிகட்டி வேண்டும்.

  • ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து இறக்கித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  • அதே வாணலியில் வடிகட்டிய நாட்டுச்சர்க்கரை கரைசலை சேர்த்து நன்கு கலக்கவும். கரைசல் ஓரளவு கெட்டியாக வரும் போது, அதில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து மிதமான சூட்டில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

  • ஒரு தட்டில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து தடவி தனியாக வைத்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் சர்க்கரை கலவை ஓரளவு கெட்டியானதும், நெய் தடவிய தட்டில் சேர்த்து பரப்பவும்.

  • பின், மிதமான சூட்டில் இருக்கும் போது கத்தியில் நெய் சேர்த்து தேவையான வடிவில் துண்டுப் போட வேண்டும்.

  • நன்கு குளிர்ந்த பிறகு துண்டுகளை பரிமாறவும்.

படிப்படியான படங்கள் :

       நாட்டுச்சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து
 கரைத்து வடிகட்டவும்.



    வாணலியில் நெய் மற்றும் தேங்காய் 
சேர்த்து சிறிது வறுத்து தனியாக வைக்கவும்.



    சர்க்கரை கரைசலைச் சேர்த்து
 நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.


    சர்க்கரை கரைசல் பதத்தை சரி பார்க்கவும்.


   தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறவும்.



   ஒரு தட்டில் நெய் தடவ வேண்டும்.



  பர்ஃபி தயாரானதும் தட்டில் பரப்பவும்.


குளிர்ந்த பிறகு துண்டாக்கவும்.



துண்டுகளை பரிமாறவும்.

0 Comments