அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!....
இந்த இனிமையான புத்தாண்டு அன்று பாரம்பரியமான சாமை அல்வா சமையல் குறிப்பை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல முடியவில்லை என்றாலும், நம் குடும்பத்துடன் இருப்பதால் மகிழ்ச்சியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இருங்கள்.
நமது பாரம்பரியமான தானியங்களில் ஒன்று தான் இந்த சாமை. இந்த புத்தாண்டு அன்று இனிமையாக தொடங்கவே ,சுவையான அல்வா தயார் செய்துள்ளேன். சாமை மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தானியங்களிலும் நீங்கள் தயார் செய்யலாம்.
அனைவரும் வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த மாதிரியான பாரம்பரிய தானியங்களை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். அதை மாற்ற அவ்வப்போது இது போல் வித்தியாசமான முறையில் தயார் செய்து கொடுத்து பாருங்கள்.
பாரம்பரிய முறையில் வேண்டும் என்றால், இதில் இனிப்பு சுவைக்கு கருப்பட்டி சேர்த்து செய்யவும். நான் அதற்கு பதிலாக வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து தயார் செய்துள்ளேன். இதன் சுவையும் மிகவும் அருமையாக இருந்தது. கண்டிப்பாக நீங்களும் தயார் செய்து பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
1. சாமை - 1 கப்
2. வெல்லம் - 1 கப் (சுவைகேற்ப)
3. நாட்டு சர்க்கரை - 1 கப் (சுவைகேற்ப)
4. நெய் - 5-6 மேஜைக்கரண்டி
5. ஏலக்காய் - 4-5
6. முந்திரி பருப்பு - தேவையான அளவு
7. உலர் திராட்சை - தேவையான அளவு
8. உப்பு ஒரு சிட்டிகை
1. சாமை - 1 கப்
2. வெல்லம் - 1 கப் (சுவைகேற்ப)
3. நாட்டு சர்க்கரை - 1 கப் (சுவைகேற்ப)
4. நெய் - 5-6 மேஜைக்கரண்டி
5. ஏலக்காய் - 4-5
6. முந்திரி பருப்பு - தேவையான அளவு
7. உலர் திராட்சை - தேவையான அளவு
8. உப்பு ஒரு சிட்டிகை
செய்முறை விளக்கம் :
- சாமை அரிசியை தேவையான அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து 2-3 முறை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, தண்ணீர் சேர்த்து 2-3 மணி நேரம் (குறைத்தது 1மணி நேரம்) ஊற வைக்க வேண்டும்.
- ஊறிய சாமை அரிசியை தண்ணீருடன் மிக்ஸியில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் ( 11/2-2 கப்) சேர்த்து கலந்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் வெல்லம் தேவையான அளவு மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து , அடுப்பில் வைத்து கரைத்து எடுக்க வேண்டும். பிறகு , அதை வடிகட்டி ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்க வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து , 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கரைந்த பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கிய முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- அதே வாணலியில் அரைத்த சாமை கலவையை சேர்த்து மிதமான சூட்டில் கலந்து விட வேண்டும். கட்டிகள் வராமல் தொடர்ந்து கலந்து விட வேண்டும்.
- 2-5 நிமிடங்களில் கெட்டி பதத்தில் மாற தொடங்கும். கை விடாமல் தொடர்ந்து கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
- நன்கு கெட்டி பதம் வந்த பிறகு , கரைத்த வெல்லம் தண்ணீர் சேர்த்து தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
- பிறகு 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்கு நெய் உள்ளே ஈர்க்கும் வரை கலந்து கொள்ள வேண்டும். 10 நிமிடம் அப்படியே வேக வைக்க வேண்டும். இடையில் அவ்வப்போது கலந்து கொள்ள வேண்டும்.ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மறுபடியும் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து அதே போல் கலந்து கொள்ள வேண்டும்.
- 10-15 நிமிடம் பிறகு 1 மேஜைக்கரண்டி நெய் கலந்து கொள்ள வேண்டும்.
- அடுத்த 5- 10 நிமிடம் அல்வா இருந்து நெய் சிறிது சிறிதாக வெளியே வர தொடங்கும். இது தான் சாமை அல்வா தயார் ஆன பக்குவம்.
- தட்டி வைத்த ஏலக்காய் மற்றும் வறுத்த முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.ஒரு 5 நிமிடம் தொடர்ந்து கலந்து அடுப்பில் இருந்து எடுத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்ற வேண்டும்.
- இப்போது மிகவும் சுவையான சாமை அல்வா தயார்.
படிப்படியான படங்கள் :
ஊறிய சாமை அரிசியை தண்ணீருடன்
மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
தண்ணீர் ( 11/2-2 கப்) சேர்த்து கலந்து
ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் 1 கப் மற்றும்
1/4 கப் தண்ணீர் சேர்த்து , அடுப்பில்
வைத்து கரைத்து எடுக்கவும்.
வடிகட்டி ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து
1மேஜைக்கரண்டி நெய் சேர்த்து
முந்திரி மற்றும் உலர் திராட்சையை
பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அதே வாணலியில் அரைத்த சாமை
கலவையை சேர்த்து மிதமான சூட்டில்
கலந்து விடவும். கட்டிகள் வராமல் தொடர்ந்து கலந்து விடவும். கெட்டி பதம் வந்த பிறகு , கரைத்த வெல்லம் மற்றும் நெய் கலந்து கொள்ளவும்.
1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து
நன்கு நெய் உள்ளே ஈர்க்கும் வரை
கலந்து கொள்ளவும்.
ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மறுபடியும்
1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து
கலந்து கொள்ளவும்.
5- 10 நிமிடம் பிறகு நெய் சிறிது வெளியே
வர தொடங்கும். இது தான் சாமை
அல்வா தயார் ஆன பக்குவம்.
தட்டி வைத்த ஏலக்காய் மற்றும் வறுத்த
முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை
சேர்த்து கலந்து கொள்ளவும்.
அல்வா தயார் இதை ஒரு
கிண்ணத்திற்கு மாற்றவும்.
சுவையான சாமை அல்வா தயார்,
சிறிய கிண்ணத்தில் சேர்த்து பரிமாறவும்.
0 Comments